×

பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் பிளாட் போட்டு ஏரி விற்பனை

*„ கண்துடைப்புக்கு எச்சரிக்கை நோட்டீஸ்
„* பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

ஆவடி: திருமுல்லைவாயல் அரபாத் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் பிளாட் போட்டு விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச். சாலையை ஒட்டி சுமார் 65 ஏக்கர் பரப்பளவிலான அரபாத் ஏரி உள்ளது. ஏரியை சுற்றிலும் மணிகண்டபுரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள்  உள்ளன. இப்பகுதி மக்களுக்கு இந்த ஏரி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை பராமரிக்காததால், குப்பை கழிவுகள் கலந்து ஏரி நீர் குடிக்க பயன்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஏரியை படிப்படியாக சமூக விரோதிகள் ஆக்கிரமித்து, பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்காமல் பொதுப்பணி துறை அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து  வருகின்றனர். இதன் விளைவாக ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர் வரை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஏரியை சுற்றி அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என குடியிருப்பு பகுதியாக உருமாறி நிற்கிறது. அதனால், மழை காலத்தில் ஏரியின் உபரி நீர் வீடுகளில் புகுந்து வருகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் மிகவும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் விடப்படுகிறது.  ஆவடி நகராட்சியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை ஒப்பந்த டேங்கர் லாரிகள் அரபாத் ஏரிக்கு செல்லும் கால்வாயில் தான் விடுகின்றனர். இந்த கழிவுநீர் நேரடியாக ஏரியில் கலப்பதால், ஏரி நீர்  மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனை நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை.

கழிவுநீரை ஏரியில் விடும் டேங்கர் லாரிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்து வருகின்றனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. டேங்கர் லாரி மற்றும்  குடியிப்புகளில் இருந்து விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசடைந்து உள்ளது. இதனால், கழிவுநீர் குட்டை போல் ஏரி மாறிவருவதுடன், ஏரியை சுற்றி உள்ள வீடுகளின் கிணறு, போர்வெல்களில் தண்ணீர் கெட்டு போய் விட்டது. வரும் காலத்தில் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலத்தடி  நீரை அறவே பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் அரசு உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு  எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அதில், 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற  அதிகாரிகள் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்பாளர்களால் ஏரியில் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதி பிளாட் போட்டு விற்கப்படுகிறது. இதுபற்றி தெரிந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்  கண்டும் காணாமல் உள்ளனர். இதனால், அதிகாரிகள் உடந்தையுடன் தான் ஏரி நிலம் பிளாட் போட்டு விற்பதாக தோன்றுகிறது. சமூக ஆர்வலர்கள் சிலர், அரசிடம் முறையிட்டதன் பேரில், வெறும் கண்துடைப்புக்காக கடந்த 2 ஆண்டுக்கு முன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்,  ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அரபாத் ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரிக்கரையை பலப்படுத்தி நடைபாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி  மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Tags : department ,
× RELATED துறைவாரியான செயல்திட்டங்களை...